தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான், நாசிக், துலே, நந்தூர்பார் ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தடைந்தது.
இதில், M3 வகை வாக்குப்பதிவு இந்திரம் 1,480, கட்டுப்பாடு இயந்திரம் 3 ஆயிரத்து 780, ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் 4 ஆயிரத்து 150 ஆகியவை வந்தடைந்தன. ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 557 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 72 கட்டுப்பாடு இயந்திரங்கள், இரண்டு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சீல் வைக்கப்பட்ட பெட்டக அறையில் காவல்துறையினர் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நேற்று (டிச.22) வந்த வாக்குப் பெட்டி இயந்திரங்களை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் லாரியின் சீல் உடைக்கப்பட்டு ஆய்வு செய்த பின்னர் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய புதிதாக திறக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்ப்பு பணிக்காக பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து பொறியாளர்கள் விரைவில் திருவண்ணாமலைக்கு வரவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.