திருவண்ணாமலை: விழுப்புரம் மாவட்டம், சங்கீதவாடி கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர், திருவண்ணாமலை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை ஒன்றில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று திருவண்ணாமலை நகர மத்திய பேருந்து நிலையத்திலிருந்து செஞ்சி, மேல்மருவத்தூர், தாம்பரம் வழியாக கோயம்பேடுக்கு செல்லக்கூடிய அரசுப் பேருந்தை இயக்கிச் சென்றார்.
இந்நிலையில், பெரியார் சிலை அருகே சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்தின் முன்பு திடீரென இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் குறுக்கே சென்று பேருந்து ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் அரசுப்பேருந்து ஓட்டுநரின் கதவைத் திறந்து சட்டையை பிடித்து இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநரும் பதிலுக்கு இளைஞரை தாக்கியதாகத் தெரிகிறது.
சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக மாறி மாறி தாக்கிக் கொண்ட சம்பவத்தால் சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் அரை மணி நேரம் சாலையின் இரு புறங்களிலும் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பசுபதி பாண்டியன் குரு பூஜை: போலியாக நன்கொடை ரசீது அச்சடித்து வசூல் - மூவர் கைது