திருவண்ணாமலை: செங்கம் அடுத்த காயம்பட்டு ஊராட்சியில் வெங்கடேசபுரம் பகுதியில் இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் இயங்கி வருகிறது. பள்ளி பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ள நிலையில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து நிதி திரட்டி புனரமைப்பு செய்து பள்ளியினை திறந்து வைத்தனர்.
முற்றிலும் சேதமடைந்திருந்த நிலையில் பள்ளியின் கட்டடத்தினை புதுப்பிக்க பல முறை அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியருடன் இணைந்த முன்னாள் மாணவர்கள் பொதுமக்களிடம் நிதி திரட்டி பள்ளியின் சுவர் மற்றும் கூரைகள், கழிவறை வசதி, குடிநீர் வசதி, சத்துணவு கட்டடம் உள்ளிட்ட கட்டடங்களை புதுப்பித்து, செங்கம் மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்தன், செங்கம் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் முன்னாள் ஆசிரியர்களை சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து பள்ளியினை திறந்து வைத்தனர்.
அரசிடம் பல முறை சொல்லியும் சேதமடைந்த பள்ளியை புதுப்பிக்கத் தவறிய நிலையில் முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து அரசை எதிர்பாராமல் பொதுமக்களிடம் நிதி திரட்டி, பள்ளியை புனரமைப்பு செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மது பிரியர்களின் கூடாரமாக மாறிவரும் சிறுவர் பூங்கா