திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, அரசு மருத்துவர்கள் கரோனா நோயால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் மொபைல் செயலி வழியாக கலந்துரையாடினர்.
கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர், அவர்களை நேரில் சென்று பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லாத காரணத்தால் Zoom App என்ற மொபைல் செயலி வழியாக காணொலி காட்சி மூலம் அவரவர் இருப்பிடத்திலிருந்து மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவருடன் கலந்துரையாடல் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் பத்து பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் 10 பேரும் சீரான உடல்நிலையுடன் உள்ளனர், இவர்களில் ஆனந்தன் என்பவர் கரோனா நோயிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டார்.
கரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான 10 பேரின் குடும்பத்தாரும் மிகுந்த மன உளைச்சல், அச்சத்தில் இருந்தனர், அவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் நோய் பாதித்தவர்கள், மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
நோயாளிகளின் உடல்நிலை எப்படி இருக்கிறது, எப்போது அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள், அவர்களை எவ்வாறு மருத்துவர்கள் கவனித்துக் கொள்கிறார்கள் என்பது குறித்து உறவினர்கள் கேட்டறிந்தனர். இந்த கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக கூறினார்.
இதையும் படிங்க: பிரியாணிக்காக அடம்பிடித்த கரோனா நோயாளி!