திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, மருதாடு கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.
விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகள் கடந்த 10 நாள்களாக எடை போடப்படாததால், விவசாயிகள் நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையம் வளாகத்தில் அடுக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் விவசாயிகள் கொண்டு வந்த 500க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால், நெல் மணிகள் முளைத்து விட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த வந்தவாசி சட்டப்பேரவை உறுப்பினர் அம்பேத்குமார் இன்று (மே 26) நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்குச் சென்று நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது அலுவலர்களை அழைத்து விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகள் அனைத்தும் உடனடியாக எடை போட வேண்டும் என உத்தரவிட்டார்.