திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள துருகம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம் (25). சரவணராஜி (25), சிவகுமார் (24) இவர்கள் மூவரிடமும் காவல் துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறிய இரண்டு பேர் அவர்களிடமிருந்து இரண்டு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பாக சிவகுமார் அளித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி, இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கூறி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சரவணக்குமாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், குற்றவாளிகள் இரண்டு பேரையும் கைதுசெய்தனர்.
பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதேபோன்று 21 நபர்களிடம் காவலர் பணி வாங்கித் தருவதாக ஏமாற்றி சுமார் 30 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, அவர்களிடமிருந்து மூன்று கார்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.