திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில், திருவூடல் தெருவில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுக தெற்கு மாவட்ட மாணவரணிச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, "தமிழுக்காக பல்வேறு பணிகளை நமது தமிழ்நாடு அரசு செய்துவருகிறது. முதலமைச்சரின் செயல்பாட்டால் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது" என்றார்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்ட திமுக மாணவரணி சார்பில் அண்ணா சிலை அருகே மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, "1965ஆம் ஆண்டு வரை ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் கூட நீதிபதியாக இருந்ததில்லை. பல்வேறு கொடுமைகளை அனுபவித்த பிறகு போராடிப் போராடி பின்னர்தான் அனைத்து வகுப்பினரும் நீதிபதியாக வர முடிந்தது. நாம் மனிதர்களாக வாழ்வதற்கு காரணம் மொழி. நம் மொழியை உலகத்தில் உள்ள பல நாடுகளும் மதிக்கின்றன. நாம் மதிக்கத் தவறினால் இழப்பு நமக்குதான்" என்றார்.
இதையும் படிங்க:
விரைவில் சிஏஏவிற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம்