திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்தில், சுற்றுலா பேருந்துகள் நிற்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ரூ.120 முதல் ரூ.200 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அங்குள்ள மூன்று நகராட்சி கழிவறைகளும் பூட்டி இருப்பதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும், கழிவறைகள் மூடப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு சுற்றுலாப் பயணிகள், பெண் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில், மூடி இருக்கும் கழிவறைகளை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் வசூலித்துக் கொள்ளலாம் என நினைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே ஆட்டோ கட்டணத்தை சரியான முறையில் நிர்ணயித்து கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் பணத்தை பறிக்கும் அவலநிலையை உடனடியாக மாவட்ட காவல்துறை, போக்குவரத்துத்துறை சரி செய்ய வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.