திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மடிக்கணினி வழங்கக்கோரி அரசுப் பள்ளி மாணவர்கள் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காததை கண்டித்து, முன்னாள் மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2017 - 2018 ஆம் ஆண்டு பயின்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள், தங்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை மற்றும் இலவச மடிக்கணினி இதுவரை வழங்காததை கண்டித்து 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் செங்கம் - போளூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடம் சென்ற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு ஒரு மாதத்திற்குள் மடிக்கணினி வழங்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்பின், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
![அரசு பள்ளி மாணவர்கள் மடிக்கணினி வழங்கக்கோரி சாலை மறியல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-01-01-laptop-protest-script-7203277_01072019145730_0107f_1561973250_371.jpg)