உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. ஆடி மாத பௌர்ணமி அன்று பல்வேறு மாநிலங்களிலிருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அருணாச்சலேசுவரர் திருக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து சென்றார்கள்.
கிரிவலம் வந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக அளித்த உண்டியல் காணிக்கை ரூ.1 கோடியே 32 இலட்சத்து 69 ஆயிரம் பணமும், 145 கிராம் தங்கமும், 1,810 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி முடிந்து உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர் முன்னிலையில் சுமார் 120 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
அருணாச்சலேசுவரர் திருக்கோயிலுக்கு வெளி நாடுகளிலிருந்தும் பல மாநிலங்களிலிருந்தும் பல லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். அதன்படி கடந்த 14ஆம் தேதி ஆடி மாத பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து தரிசனம் செய்து சென்ற பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கி மாலை நிறைவு பெற்றது.