திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பால் விற்பனை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் பால் உற்பத்தி சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்த மாது, செயலாளர் குப்புசாமி ஆகியோர் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையில் முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவராக இருக்கும் சர்மா, மாது, குப்புசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உற்பத்தியாளர்களிடம் நிலுவைத் தொகையை ஒப்படைப்பதாகத் தெரிவித்தார். இதன் பின்னர் குப்புசாமி பணத்தைச் செலுத்தினார். ஆனால் மாது இதுவரை பணம் கட்டாமல் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பால் உற்பத்தியாளர்கள் நேற்று (ஜூன் 18) பால் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்பின்னர் அங்கு வந்த மேல்செங்கம் காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை விரைவில் வசூல்செய்து தருவதாகக் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க... பால் கொள்முதல் விலையை குறைத்த நிறுவனங்களுக்கு எதிராக பால் முகவர்கள் சங்கம் போர்க்கொடி!