திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட துரிஞ்சாபுரம் ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நேற்று நடைபெறும் என்று அறிவிக்கபட்டது. அதிமுக அணியில் 10 ஒன்றிய கவுன்சிலர்களும், திமுக அணியில் 10 ஒன்றிய கவுன்சிலர்களும் இருந்த நிலையில் தொடந்து அதிமுக அணியினர் தேர்தலில் கலந்து கொள்ளாமல் இருந்ததால் தள்ளி வைக்கப்பட்டது.
இச்சூழலில் நேற்று காலை நடைபெற்ற ஒன்றியகுழுத் தலைவர் தேர்தலில்; பெரும்பான்மையான உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத காரணத்தினால் தொடந்து 3ஆவது முறையாக தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
இதனையடுத்து யாரும் எதிர்பாராத வகையில் காலையில் அதிமுக அணியிலிருந்து 16ஆவது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் சாந்தி ஜெகதீசன், மாலையில் திமுக பக்கம் தாவினார். இதனால் திமுக அணியின் பலம் 11 உறுப்பினர்கள் ஆன நிலையில், நேற்று மாலையில் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் 15ஆவது வார்டு உறுப்பினர் உஷாராணி சதாசிவம் துணைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் ஏற்கனவே அதிமுக கூட்டணியில், பாமக சார்பில் போட்டியிட்டு திமுகவுடன் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலசப்பாக்கம், புதுப்பாளையம், துரிஞ்சாபுரம் உள்ளிட்ட பல ஒன்றியங்களில் போதிய ஒன்றிய கவுன்சிலர்கள் இருந்தும் தேர்தலில் அதிமுக கோட்டைவிட்டது குறிப்பிடத்தக்கது.