திருவண்ணாமலை தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிட பச்சரிசி, வெல்லம், முந்திரி உள்ளிட்ட 20 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புக்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
சுமார் இரண்டு கோடியே 15 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1627 கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் 7 லட்சத்து 76 ஆயிரத்து 391 அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 505 மதிப்புள்ள 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு கடந்த 4ஆம் தேதி முதல் மாவட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த பொங்கல் தொகுப்புகளில் வழங்கப்படும் வெல்லம் உள்ளிட்ட சில பொருட்களின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக குடும்ப அட்டை தாரர்களிடம் இருந்து தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில் நேற்று (ஜனவரி 10) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கிரிவலப்பாதையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் சுமார் 2.5 டன் தரமற்ற வெல்லம் பொது மக்களுக்கு வழங்கப்பட இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும், தரமான பொருட்களை அளிக்கவும், அளித்த பொருட்களில் தரம் குறைவாக இருந்தாலோ அல்லது தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்தால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என்றும், தரமற்ற பொருட்கள் இருந்தால் அவற்றைப் பெற்றுக்கொண்டு மாற்றுப் பொருட்களை அளிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, "பொது மக்களிடம் இருந்து வந்த புகாரையடுத்து நேரில் ஆய்வு செய்ததாகவும், பைகள் இல்லாததால் பொருட்கள் வழங்கும் பணியில் சிறிது தொய்வு இருந்ததாக தெரிவித்தார்.
தற்போது அவை சரிசெய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 2.5 டன் வெல்லம் தரமற்று இருந்ததாகவும், அவற்றை அனுப்பிய நிறுவனமே அந்த வெல்லத்தைப் பெற்றுக்கொண்டு மாற்று வெல்லத்தினை அளித்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜன.31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!