நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 20ஆம் தேதி தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இவ்விழாவின் 10ஆவது நாள் திருவிழாவான இன்று (நவம்பர் 29) அதிகாலை சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றன.
அதன் பின்னர் அதிகாலை 3.18 மணிக்கு ஆலயத்தின் கருவறை முன்பு உள்ள பிரதோஷ நந்தி சிலை அருகில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஏகன் அனேகன் என்னும் தத்துவத்தை விளக்கும் வகையில் ஒரு மடக்கிலிருந்து 5 மடக்கிற்கு தீபம் ஏற்றப்பட்டது. பிரதோஷ நந்தி சிலை அருகில் ஏற்றப்பட்ட பரணி தீப மடக்கை சிவாச்சாரியார் கையில் ஏந்தியவாறு இரண்டாம் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து, வைகுந்த வாயில் வழியாக மூன்றாம் பிரகாரத்தில் உள்ள உண்ணாமுலையம்மன் சன்னதியில் உள்ள உண்ணாமுலை அம்மனுக்கு ஆராதனை காட்டப்பட்டது. பின்னர் கொடிமரம் அருகில் உள்ள விநாயகர் முருகர் ஆகியோருக்கு ஆராதனை காட்டப்பட்டு மீண்டும் திருக்கோயிலின் மூல ஸ்தானத்தில் ஆராதனை காட்டப்பட்டது.
இந்தாண்டு கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தீப தரிசனத்தைக் கண்டுகளிக்கும் வகையில் தொலைக்காட்சி, கோயில் இணையதளம், உள்ளூர் சேனல்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இந்து சமய அறநிலையத் துறையும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து உள்ளது.
பரணி தீபத்தை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கான கொப்பரை, 3 ஆயிரத்து 500 கிலோ ஆவின் நெய், 1000 மீட்டர் காடாத் துணி உள்ளிட்டவை மலை உச்சியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.