திருவண்ணாமலையில் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தேத்துறை கிராமத்தில் உள்ள வந்தவாசி காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் தான் இந்த விபத்து நிகழ்ந்து உள்ளது.
அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படும் நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த மனைவி ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அப்பகுதி மக்கள் அனுமதித்தனர்.
இந்நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அனக்காவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில், உயிரிழந்தவர்கள் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், அவருடைய மனைவி பிரியா மற்றும் இந்த தம்பதியினரின் மகள் திலக்ஷனா என்பது தெரிய வந்தது. இந்த மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் கோயில் திருவிழாவுக்கு சென்று விட்டு வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
அப்போது செய்யாறு அடுத்த தேத்துறை கிராமம் அருகே சென்ற போது காஞ்சிபுரத்திலிருந்து புதுச்சேரிக்குச் சென்ற அரசு பேருந்து இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து மேலும் விசாரிக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வந்தவாசி அருகே அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், வேலூர் அருகே நின்றிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பின்பக்கத்தில் மோதி இரு இளைஞர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரையும் அருகில் இருந்த நபர்கள் மீட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் உடனடியாக மற்றொரு இளைஞரை ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அவரும் துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:"என் மகனை போலி என்கவுண்டர் செய்யப்போவதாக போலீசார் மிரட்டல்" - கைதியின் தாய் கதறல்!