திருவண்ணாமலை: தமிழ்நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று வேகம் எடுத்து வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை காய்கறி மற்றும் பூ மார்கெட் மாற்று இடங்களில் செயல்படவுள்ளது. அந்த இடங்களை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் ஆய்வு செய்தார்.
அப்போது பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முகக் கவசம் சமூக இடைவெளி உள்ளிட்டவைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
3,747 படுக்கை வசதிகள்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 114 பேர் கரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் நேற்று 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,747 படுக்கை வசதி உள்ளதாகவும்,அதில் 1980 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கரோனா நோயாளிகளுக்கு எந்த ஒரு அறிகுறி இல்லை என்றால் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். இதில் நோயாளிகளுக்கு உடல் ரீதியான பிரச்சனை ஏதேனும் இருந்தால் மட்டும், அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கோயிலில் அனுமதி
தற்காலிகமாக செயல்படும் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் கரோனா தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்படும் என்றும் காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்கிறவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் மட்டுமே அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கால் குன்னூர் வந்த சுற்றுலாப் பயணிகள் தவிப்பு