திருவண்ணாமலை முகல்புறா தெருவில் சாதிக் பாஷா என்பவர் தனது சொந்த வீட்டில் குட்கா பொருள்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் டெல்டா படை காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை சுமார் 5:30 மணியளவில் சாதிக் பாஷா (51), அவரது மகன் காதர் (27) ஆகியோர் தங்களது சொந்த வீட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
இவர்கள் வீட்டிலிருந்தபடியே மற்ற கடைகளுக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சாதிக் பாஷாவும் அவரது மகனும் சேர்ந்து திருவண்ணாமலை காய்கறி சந்தையில் ஏ.எம்.எஸ். மளிகைக் கடை நடத்திவருகின்றனர். இதன் மூலம் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருள்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. அத்துடன் அவர்களிடமிருந்த மூன்று இருசக்கர வாகனங்களையும் டெல்டா காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.