திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது அனைவரும் வரிசையில் இடைவெளி விட்டு நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு கை கழுவும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. உடல் வெப்ப அளவைக் கண்டறியும் தெர்மல் பரிசோதனையும் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள கிருமிநாசினி, முகக்கவசங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. முன்னதாக, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மகளிர் குழு உறுப்பினர்கள் முதல் கட்டமாக 10 ஆயிரம் முகக்கவசங்களையும், ஆயிரம் கிருமிநாசினிகளையும் தயாரித்து சுகாதாரத் துறைக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், குறும்படங்கள் மூலமாகப் பொதுமக்களிடம் கரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடமாடும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதையும் படிங்க: நாளை முதல் ஊரடங்கு உத்தரவு - அத்தியாவசிய பொருள்களை வாங்க குவிந்த மக்கள்!