திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமை தாங்கினார். மேலும் பல்வேறு துறை அலுவலர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
அப்போது, விவசாயிகள் கூறுகையில், "ஏரிகளுக்கு மழை நீர் வரும் கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் உள்ளன. அனைத்து கால்வாய்களும் சீரமைக்கப்பட வேண்டும். வேளாண்மைக் கூட்டுறவுக் கடைகளில் வழங்கப்படும் உரம் தரமானதாக இல்லை. இதனை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்
நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றவும், நீண்ட காலமாக உள்ள கரும்பு நிலுவைத் தொகையினை பெற்றுத் தருவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளின் நெல்லை வாங்காமல், விவசாயிகளின் நெல்லை வாங்க வேண்டும்.
விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும்போது, அதில் அலுவலர்கள் அதிக எடை வைத்து ஊழல் செய்து கொள்ளை அடிக்கின்றனர். அதைத் தடுக்க வேண்டும்' எனப் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதைத் தொடர்ந்து, 'இந்த ஊழலைத் தடுக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவோம்' என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்!