திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் திருகார்த்திகை தீபத்திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருக்கார்த்திகை தீபவிழாவின் 10 ஆம் நாளான இன்று காலை அண்ணாமலையார் சன்னதியில் ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக கோயிலில் உள்ள சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பின்னர் மாலை 5 மணியளவில் அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் பல்வேறு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆலய கொடிமரத்தின் முன்பே தீப தரிசன மண்டபத்தில் தோன்றி பக்தர்களுக்கு காட்சி அளித்து தீப மண்டபத்தில் எழுந்தருளினர்.
இதையடுத்து, பஞ்ச மூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளினர்கள். பின்னர் சரியாக மாலை 6 மணியளவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சியளிக்கும் சிவனின் பாதி சக்தி என்பதை உணர்த்தும் வகையில் அர்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
அப்போது, கோயிலின் கொடி மரத்தின் அருகிலுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்படும். இதைத்தொடர்ந்து, சரியாக மாலை 6 மணியளவில் கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலைமீது அனேகன் ஏகனாக ஜோதி வடிவமாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக மஹா தீபம் ஏற்றப்பட்டது.
சுமார் 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையின் மீது 5.2 அடி உயரம் கொண்ட கொப்பறையில் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கப்பட்ட 3 ஆயிரத்து 500 கிலோ நெய் நிரப்பட்டு ஆயிரம் மீட்டர் காடா துணியை திரியாக திரித்து மகா தீபம் ஏற்றப்பட்டது.
நூற்றாண்டு கால வரலாற்றில் மகா தீப தரிசனத்தை சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு களித்து சுவாமி தரிசனம் செய்து 14 கிலோ மீட்டர் கிரிவலம் வருவது வழக்கம்.
இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக கோயிலில் பக்தர்கள் யாருமின்றி மகாதீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் கோயிலுக்கு உள்ளேயும், 14 கிலோமீட்டர் கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இன்று ஏற்றப்பட்ட மகாதீபம் தொடர்ந்து 11 நாள்கள் எறியும் என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு மட்டும் முகக்கவசம் அணிந்து மாட வீதியை சுற்றிவர மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததுள்ளது.
இதையும் படிங்க:தீபத்திருவிழா: திருவண்ணாமலை கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை