வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன மூஞ்சூர் ஜெய்பீம் நகரைச் சேர்ந்தவர் லாவண்யாதேவி(24). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் வனத்துறையில் வேலை கிடைத்தது. கோவையில் பயிற்சியில் சேர்ந்த லாவண்யாதேவி, பயிற்சி முடித்து மார்ச் மாதம் திருவண்ணாமலை வனத்துறை அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
சின்னகடைத் தெருவில் உள்ள வனத்துறை விடுதியில் தங்கி அவர் வேலைக்குச் சென்றுவந்தார். கடந்த சில நாட்களாக லாவண்யாதேவி விரக்தியாக, மனமுடைந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களாக லாவண்யாதேவியின் விடுதி அறை திறக்கப்படாமல் கிடந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக லாவண்யாதேவியின் அறையைப் பார்த்தனர். அப்போது அவர் விடுதியின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலை நகர காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், லாவண்யாதேவியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவலர்கள் அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காட்டுக்குள் வேட்டையாடச் சென்றவர்களுக்குள் மோதல்; துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் பலி!