திருவண்ணாமலை : பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத்திருவிழா, நவம்பர் 27ஆம் தேதி அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் நிறைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை, கோயில் கருவறையின் முன் 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத்தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு கோயில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்.
இதற்கான அனைத்து பணிகளும் கோயிலின் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொடிமரம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சம்பந்த விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து திருக்கார்த்திகை தீபத் திருவிழா அழைப்பிதழை ஸ்ரீ சம்பந்த விநாயகரிடம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த அழைப்பிதழை இந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் ராஜேந்திரன் வழங்க, கோயில் சிவாச்சாரியார்கள், ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆன்மீக பக்தர்கள் என அனைவரும் பெற்றுக்கொண்டனர்.
இதையும் படிங்க: பழனியில் கந்த சஷ்டி திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு