திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் 'ஆரோக்கியம்' திட்டத்தை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடக்கி வைத்தார். அதில் அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்குச் சித்த மருத்துவம் சார்பாக கபசுரக் குடிநீர் சூரணம், ஆயுர்வேத மருத்துவம் சார்பாக இந்து காந்த கஷாயம், ஹோமியோபதி மருத்துவம் சார்பாக ஆர்சனிகம் ஆல்பம் மாத்திரைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கஸ்தூரி, சித்த மருத்துவர்கள் கார்த்திகேயன், துரைவிநாயகம், ஆயுர்வேத மருத்துவர் புனிதவதி, ஹோமியோபதி மருத்துவர் ராதிகா, யோகா மருத்துவர் விஜய் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
சித்த மருத்துவ வல்லுநர்களின் பரிந்துரைகளை ஏற்று, பொதுமக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்ளவும், உடல் நலத்தைப் பேணவும் கடந்த 23ஆம் தேதி ஆரோக்கியம் என்ற சிறப்புத் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்தச் சிறப்பு திட்டத்தின் வழிமுறைகள் கரோனா நோய்க்கான சிகிச்சை அல்ல எனவும், பொதுவான நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மருத்துவ ரீதியாக ஆய்வு செய்யப்பட்ட வழிமுறைகள் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஹோமியோபதி மருத்துவத் துறை சார்பில் காவல் துறையினருக்கு மாத்திரைகள்