திருவண்ணாமலை: திருக்கோவிலூர் சாலை எடப்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 30 குடும்பங்களைச் சேர்ந்த 80 நபர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பன்றிகளை வளர்த்து அதனை விற்பனை செய்வதை, முதன்மையான தொழிலாகக் கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில், இதே பகுதியில் சரோஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ராஜேஸ்வரி. இவர் நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 375 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார். இதனையடுத்து, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் உயர் கல்விக்காக விண்ணப்பித்து உள்ளார்.
அப்போது, அனைத்து கல்லூரியிலும் சாதிச் சான்றிதழ் கேட்டு உள்ளனர். ஆனால், மாணவியிடம் சாதிச் சான்றிதழ் இல்லாததால், அவரால் உயர் கல்விக்குச் செல்ல முடியவில்லை. இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
இதனையடுத்து, மாணவி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் கூறுகையில், “பன்னியாண்டி என்ற சாதிச் சான்றிதழ் இல்லாததால் மாணவி மன உளைச்சலில் இருந்தார். பின்னர், அவர் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். 12ஆம் வகுப்பிற்கு மேல் எங்களது பிள்ளைகள் மேல் படிப்பைத் தொடர இயலாமல் இருந்து வருகின்றனர்.
இது தொடர்பாக கிராம அலுவலகம் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் வரை பல முறை புகார் அளித்தும் நாங்கள் அளிக்கும் புகாருக்கு எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது எங்களுக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. பன்னியாண்டி என்ற சாதிச் சான்றிதழ் இல்லாததால் எங்கள் பிள்ளைகளின் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது.
எங்களது குழந்தைகளின் எதிர்காலம் இதனால் பெரிதும் பாதிப்படைகிறது. எனவே, இதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உரிய சாதிச் சான்றிதழ் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
மேலும், தாங்கள் பன்றியை வைத்துதான் வாழ்வாதாரத்தை தேடி வருகிறோம் என்றும், அந்த பன்றிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டு வந்து வைத்தாலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறோம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து இருந்தனர்.
இதையும் படிங்க: சாதிச் சான்றிதழ் இல்லாததால் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவி தற்கொலை முயற்சி!