திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது ஊத்தூர் கிராமம். இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களும் இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தக் கிராமத்தில் மயானப் பாதை இல்லாததால் கிராம மக்கள் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வயல்வெளியிலும், கரடுமுரடான பாதையிலும் சடலத்தை தூக்கிச்சென்று அடக்கம் செய்யும் அவலநிலை கடந்த 60 ஆண்டு காலமாக நீடித்து வருகிறது.
சுடுகாடுக்கு செல்ல சரியான பாதை அமைத்து தரக்கோரி எம்எல்ஏக்கள், எம்பிக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர் இக்கிராம மக்கள்.
மேலும், நேற்று (செப்.26) இக்கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி பச்சையம்மாள் என்பவர் உயிரிழந்த நிலையில், கிராம மக்கள் ஒன்றிணைந்து பச்சையம்மாளின் சடலத்தை தோளில் சுமந்தபடி வயல்களில், கரடுமுரடான பாதையில் வழிநெடுகிலும் உள்ள மரம், செடி, கொடிகளை அகற்றிக் கொண்டே சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர்.
மேலும், கிராமத்தில் உயிரிழப்பு ஏற்படும்போதெல்லாம் சுடுகாட்டுப் பாதை குறித்து ஒருவருடன் ஒருவர் தகராறில் ஈடுபடுவது வழக்கமாகி வருகிறது. எனவே தங்களது 60 ஆண்டு காலக் கோரிக்கையான இப்பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காணும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர் இக்கிராம மக்கள்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் ஆபாசப் படங்களை விளம்பரப்படுத்தி விற்பனை செய்த தொழில்நுட்ப வல்லுநர் கைது!