திருவண்ணாமலை: ஆரணி அருகே முள்ளண்டிரம் ஊராட்சிக்கு உட்பட்ட கே.கே.தோப்பு பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஏழுமலை - நித்யா தம்பதியினருக்கு கோகுல், தஸ்வின் என்ற 2 மகன்களும் பிரியதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். பிரியதர்ஷினி முள்ளண்டிரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வருகின்றார்.
இந்த மாதம் பள்ளி திறந்த பின்பு தலைமையாசிரியர் தனஞ்செழியன், சிவப்புக்கம்பளம் விரித்து பள்ளி மாணவ மாணவிகளை கௌரவப்படுத்தி அழைப்பு விடுத்தார்.
இதனால் மனமகிழ்ந்த பிரியதர்ஷினி கடந்த ஒரு ஆண்டு காலமாக சைக்கிள் வாங்க சேமித்த 6 ஆயிரத்து 175 ரூபாய் பணத்தை தன்னுடைய அரசுப்பள்ளிக்கு மேம்பாட்டு நிவாரணமாக தலைமையாசிரியர் தனஞ்செழியனிடம்
வழங்கி அசத்தினார்.
மேலும் சிறு வயதில் சேமித்த பணத்தை அரசுப்பள்ளிக்கு தந்து உதவிய மாணவியைப் பாராட்டும் விதமாக பள்ளியில் பாராட்டு விழா நடத்தி பிரியதர்ஷினிக்கு 'சுடரொளி விருதை' பள்ளி சார்பாக வழங்கி கௌரவித்தனர்.
இச்செயலால் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை வளரும் எனவும்; சேமிப்புத் தொகையை தொடர்ந்து தன்னுடைய பள்ளிக்கு தந்து உதவி செய்வேன் எனவும் மாணவி பிரியதர்ஷினி தெரிவித்தார். மேலும் அரசுப் பள்ளியை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: காலையில் சத்து மாத்திரை.. மதியம் சத்துணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்