திருவண்ணாமலை: வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்திற்கு சுமார் 45 வருடங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அநாதையாக ஆதரவு தேடி ஒரு நபர் வந்துள்ளார். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த நபர்களே அவருக்கு சபரிமுத்து என பெயர் வைத்து, வீடு வீடாக தினமும் அவருக்கு உணவு வழங்கி வந்துள்ளனர்.
பல்வேறு சூழ்நிலைகளில் அந்த கிராம மக்களோடு ஒருங்கிணைந்து சபரிமுத்து ஒன்றாக வாழ்ந்து வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல் நலிவுற்று இருந்த சபரிமுத்துவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைத்து கிராம மக்கள் சிகிச்சைப் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் சபரிமுத்து உடல் நலக்குறைவால் காலமானார்.
அநாதையாக வந்த அந்த நபர் அந்த கிராமத்தை தன் குடும்பமாக நினைத்து வாழ்ந்துள்ளார். சபரி முத்துவை அந்த கிராமத்தின் மக்களும் ஒன்றிணைந்து தங்கள் வழக்கப்படி இறுதி மரியாதை செய்து ஊர்வலம் நடத்தி நல்லடக்கம் செய்தனர். அநாதையாக வந்த சபரிமுத்துக்கு 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு ஊர்வலமாக கண்ணீர் சிந்தி நல்லடக்கம் செய்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: போலி சாஃப்ட்வேர் மூலம் அதிக விலைக்கு ரயில் டிக்கெட் விற்பனை: முக்கிய குற்றவாளி கைது