திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி. அசோக்குமார் தலைமையிலான காவலர்கள், நேற்று (மார்ச்.10) இரவு போளூர் பகுதியில் உள்ள சனிக்கவாடி - செய்யாறு சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக மணல் கடத்தி வந்த மினி லாரியை காவல் துறையினர் மடக்கி பிடித்து லாரி ஓட்டுநரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தென்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சண்முகம் (36) என்பதும், லாரி உரிமையாளர் போளூர் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் டீக்கடை நடத்தி வரும் ஏழுமலை என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து, இவரது டீக்கடைக்கு வரும் காவலர்களுடன் நல்ல நட்புறவை ஏற்பட்டுத்தி கொண்டு, அவர்களின் கண்காணிப்பு பணிகளையும் அறிந்து கொண்டு யாரிடமும் சிக்காமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக இரண்டு மினி லாரிகளில் அவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் காவல் துறையினருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. மேலும் தலைமறைவாக உள்ள ஏழுமலையை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆற்று மணல் திருடிய 3 பேர் கைது