திருவண்ணாமலை அடுத்த செங்கம் முன்னூர் மங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன். இவருக்கு பவானி என்ற மனைவியும் ஷர்மிளா (8 வயது), சுமித்ரா (6 வயது), தேவிகா (4 வயது) ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். மூன்று பெண் குழந்தைகளும் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தொடக்க கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக தொடர் வயிற்று வலியால் அவதியுற்று வந்த பவானி பல்வேறு இடங்களில் சென்று மருத்துவம் பார்த்துள்ளார். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.
இதனால் மனமுடைந்த பவானி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். அப்போது தான் மட்டும் இறந்துவிட்டால் தன் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற அச்சத்தில் எறும்பு சாக்பீஸ் மருந்தை அரைத்து பாலில் கலந்து மூன்று குழந்தைகளுக்கும் கொடுத்து குடிக்க வைத்து தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தைகள் கதறி அழுது, இருமல், வாந்தி எடுத்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்கள் நால்வரையும் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவர்கள் நால்வருக்கும் முதல் உதவி சிகிச்சை செய்த மருத்துவமனை ஊழியர்கள், நான்கு பேரையும் உள்நோயாளியாக அனுமதித்து, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பவானியின் தற்கொலை முயற்சி தொடர்பாக வழக்கு பதிந்துள்ள செங்கம் காவல்துறையினர் வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க :புலம்பெயர்தல், கரோனாவை விட மிகப்பெரிய அச்சுறுத்தல்!