திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 26ஆம் தேதி 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையில், மகா தீபமும், அதைத் தொடர்ந்து மறுநாள் காலையில் அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும் ஏற்றப்படும்.
அந்த வகையில், இதை காண்பதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில், சென்ற ஆண்டு 25 லட்சம் பக்தர்கள் வந்ததாக அரசு அறிவித்து இருந்தது. அதை தொடர்ந்து, இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என அரசு கணக்கிட்டு உள்ளது.
இதன் காரணமாக கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வருகின்ற பக்தர்களுக்கு உதவிடும் வகையில், தெற்கு ரயில்வே தீபவிழா நாளான 26ஆம் தேதி சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அதற்கான தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு பின்வருமாறு,
சிறப்பு ரயில்களுக்கான விவரங்கள்:
இந்த மாதம் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து புறப்பட்டு வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இரவு 9.50க்கு புறப்பட்டு, நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 03.45 மணிக்கு புறப்பட்டு, வேலூர் கண்ட்டோன்மென்ட் வழியாக சென்னை கடற்கரை ரயில் நிலையம் சென்றடையும்.
26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து காலை 9:15க்கு புறப்படும் சிறப்பு ரயில், திருவண்ணாமலைக்கு 11.00 மணிக்கு சென்றடையும்.
26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம் வழியாக மயிலாடுதுறை சென்றடையும்.
25 மற்றும் 26 இரவு 09.15 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரயில், விழுப்புரம் வழியாக தாம்பரம் சென்றடையும்.
25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 08.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், வேலூர் கண்டோன்மென்ட் வரை தொடரும்.
26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் காலை வேலூரில் இருந்து 01.30 மணிக்கு புறப்படும் ரயில், திருவண்ணாமலைக்கு காலை 3 மணிக்கு சென்றடையும். தொடர்ந்து அந்த ரயில் திருப்பாதிரிப்புலியூர், திருச்சி செல்லும்.
26.11.2023 திருச்சி ஜங்ஷனில் இருந்து அதிகாலை 04.50 மணிக்கு புறப்படும் ரயில், திருவண்ணாமலைக்கு காலை 11:40க்கு சென்றடையும். தொடர்ந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை ரயில் செல்லும்.
26.11.2023 நள்ளிரவு 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரயில், திருச்சிக்கு மறுநாள் காலை 7.35 மணிக்கு சென்றடையும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: முழுக் கொள்ளளவை நெருங்கும் முல்லைப் பெரியாறு அணை! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!