திருவண்ணாமலை: கலசபாக்கம் வட்டம் சிறுவள்ளூர் கிராமத்தில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி மன்றத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த அண்ணாமலை உள்ளார். அதேபோல் அதிமுகவைச் சேர்ந்த கீதா துணைத்தலைவராக உள்ளார். மேலும் ஊராட்சி செயலாளராக கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக நாராயணன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், 100 நாள் வேலைத் திட்டம், பஞ்சாயத்தில் நடைபெறும் வேலை உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் தன்னிச்சையாக முடிவு செய்து ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களைச் செயல்படவிடாமல் தடுப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கு சிறுவள்ளுர் ஊராட்சி மன்றம் சார்பில் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் நாராயணன் என்பவரைப் பணி மாறுதல் செய்துள்ளனர். ஆனால், அவர் அந்த கிராமத்தை விட்டுச் செல்லாமல் இருந்துள்ளார். மேலும், ‘நான் இதே கிராமத்தில்தான் இருப்பேன். உங்களால் என்ன செய்ய முடியும்? நீங்கள் வேண்டுமானால் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் ’ எனவும் பேசியுள்ளார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த சிறுவள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் மீது பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். இதனைப் பார்த்த காவலர்கள், அவரை தடுத்து நிறுத்தி பெட்ரோல் கேனை அவரிடமிருந்து பறித்தனர்.
இதையும் படிங்க: அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக் கூறி ரெய்டு.. ரூ.2 கோடி கொள்ளையடித்த கில்லாடி கொள்ளையர்கள்...