திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, பையூர், எம்ஜிஆர் நகரில் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி, பொதுமக்களுக்குப் பரிசுப்பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ' மாவட்டத்திலுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருட்கள் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை போன்ற பரிசுகள் தற்போது வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 35 ஆயிரத்து 359 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 73 கோடியே 53 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 13 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்படுகிறது" என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் தூசி மோகன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் அமைச்சர்கள் பொங்கல் பரிசு வழங்கல்!