திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணை தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய அணைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. கடலூர் மாவட்டம் வரை சாத்தனூர் அணையின் நீர் செல்கிறது. பாசன கால்வாய் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
சாத்தனூர் அணை கட்டப்பட்டு 60 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை ஒருமுறை கூட இந்த அணை தூர்வாரப்படவில்லை. இதன் காரணமாக தற்போது அணையில் 30 அடிக்கு மேல் மண்ணும், சேருமே நிரம்பியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் சாத்தனூர் அணையில் 40 அடி அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருக்கும் என்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறுகின்றனர். தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் வழக்கத்தைவிட அணையின் நீர்மட்டம் 20 அடி குறைந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக அணையில் உள்ள தண்ணீரானது மேலும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே சுற்றவற்றாரப் பகுதிக்கு தண்ணீர் வழங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சாத்தனூர் அணையிலிருந்து அமைக்கப்பட்டுள்ள பாசன கால்வாய்கள் சீரான பராமரிப்பு இல்லாததால் அதிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடை வரை பாயாமல் வீணாகி, விவசாயம் பொய்த்து நிலங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன.
சாத்தனூர் அணையில் 30 அடிக்கு மேல் தேங்கியுள்ள மணலும், சேரும் தற்போது உள்ள வறட்சியை பயன்படுத்தி தூர்வாரப்பட வேண்டும். இதன் மூலம் மழைக்காலங்களில் அதிக நீரை சேமிக்க முடியும். எனவே தூர்வாரும் பணியை அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்பதே விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.