கரோனா முன்னெச்சரிக்கை தடுப்புப் பணிகளை மருத்துவர்கள், காவல் துறையினருக்கு அடுத்தப்படியாக ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களே அதிகளவில் ஈடுபட்டு பொதுமக்களைக் காத்துவருகின்றனர்.
கரோனா காலம் என்பதால் தமிழ்நாடு அரசு அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு கூடுதல் பணி வழங்கிவருவதால் தூய்மைப் பணியாளர்கள் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இச்சூழலில், குப்பை வண்டியில் சிக்கி தூய்மைப் பணியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த செ. சொர்பனர்தல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், இதே ஊராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவந்தார்.
![உயிரிழந்த தூய்மை பணியளார் செல்வம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-03-cleaner-died-vis-7203277_31072020184158_3107f_1596201118_566.png)
செ. சொர்ப்பனந்தல் ஊராட்சியில் உள்ள குப்பைகளை அதிகளவு ஏற்றிக் கொண்டு செல்லும்போது வண்டி கவிழ்ந்துள்ளது. அப்போது வண்டியின் அடியில் செல்வம் சிக்கியுள்ளார். உடனே அவரை மீட்டு சக ஊழியர்கள் செங்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து உயிரிழந்த செல்வத்தின் உடலை தண்டராம்பட்டு-செங்கம் சாலையில் வைத்து, ஓய்வின்றி உழைத்த தூய்மைப் பணியாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் எனவும் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பாச்சல் காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க...பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களை அதிமுக அரசும், பாஜகவும் காப்பது ஏன்? இந்திய மாதர் சங்கம் அறிக்கை!