காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு சீருடையில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளர் ரமேஷை பக்தர்கள் முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் திட்டினர்.
இச்சம்பவம் அங்கிருந்த சிலரால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. பல்வேறு தரப்பில் இருந்தும் மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் செயலைக் கண்டித்து திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஓய்வுபெற்ற காவல்துறை நலச் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய சங்கத்தினர், ஆட்சியரின் செயலால் காவல் ஆய்வாளர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். சீருடையில் உள்ள காவலரின் மீது புகார் அளிக்க வேண்டுமென்றால் காவல்துறை தலைவரிடம்தான் அளிக்க முடியும். அதை விடுத்து ஆட்சியர் பொன்னையா பொதுமக்கள் முன்னிலையில் ஒருமையில் பேசியுள்ளார்.எனவே அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்தனர்.