மத்திய மாநில அரசு கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன, ஆனால் அரசு ஊழியர்கள் சிலர் அரசின் உத்தரவை பின்பற்றாமலும் கரோனா நோயின் விளைவுகள் பற்றி தெரியாமலும் பணிபுரிந்து வருகின்றனர், இதற்கு உதாரணம் திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடையில் பணிபுரியும் ஊழியர்.
தமிழக அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை, அரிசி,பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை வழங்கிக் கொண்டிருந்த நியாயவிலைக் கடை ஊழியர் அரசின் அறிவுரைகளை பின்பற்றாமல் கையுறை, முழு உடல் கவசம் உள்ளிட்டவற்றை அணியாமல் பொருள்களை வழங்கி கொண்டிருந்தார்.
செய்தியாளர் செய்தி சேகரிப்பதை கண்ட அவர் வேகவேகமாக கையுறை, முழு உடல் கவசம் உள்ளிட்டவற்றை அணிந்துக்கொண்டு. குடும்ப அட்டைதாரர்களையும் நீண்ட வரிசையில் வட்டம் போட்டு சமூக இடைவெளி விட்டு நிற்க வைத்து அரசு உத்தரவுபடி நோய் தொற்று பராவாதவாறு மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீர், சோப்பு ஆகியவற்றால் கை கழுவிய பிறகு பொருள்களை வாங்கிச்செல்லும் வகையில் பணி செய்தார்.
தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்கள் நீண்ட வரிசையில் நின்று சமூக இடைவெளியை பின்பற்றி முகக் கவசங்கள் அணிந்து அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் சென்றனர்.