திருவண்ணாமலை மாவட்டம், தென்மாத்தூர் உடையானந்தல் கிராமத்தில் உள்ள ஏரியை அப்பகுதியைச் சேர்ந்த, தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து தென்மாத்தூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இச்சம்பவம் குறித்து மனு அளித்தனர். அந்த மனுவில், "உடையானந்தல் ஏரியை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். ஏரியில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அந்த கிணற்றையும், ஆக்கிரமித்து, குழாய் அமைத்து விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகளை ஏரி நிலங்களில் பயன்படுத்துவதால், மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. கால்நடைகள் ஏரி தண்ணீரைப் பயன்படுத்த முடியாத அவலம் நிலவி வருகிறது. சுற்றுச் சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடமிருந்து மீட்டு, நீர் ஆதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தனி நபர் ஆக்கிரமிப்பால் பாதிப்புக்குள்ளான தென் மாத்தூர் கிராம மக்கள் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: கொள்ளிடம் ஆற்றில் அரசு விதிமுறையை மீறி செயல்படும் மணல்குவாரியைத் தடுத்து நிறுத்திய பொதுமக்கள்