திருவண்ணாமலை கன்னி கோயில் தெருவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் லாரிகளில் வந்து இறங்குவதாக, திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் நாகேந்திரனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். அப்போது லாரி மூலம் 1, 250 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடத்தி கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. பின் இதனை நகராட்சி ஊழியர்கள் கைப்பற்றினர்.
தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களையும், இதைக் கொண்டுவர பயன்படுத்தப்பட்ட லாரியையும், திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் நகராட்சி ஊழியர்கள் ஒப்படைத்தனர்.
அங்கு லாரி ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது லாரி ஓட்டுநர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் லாரியில் எங்கிருந்து, யாருக்கு பிளாஸ்டிக் பொருட்களை கடத்தி வந்தார் என்பது குறித்த தகவல்களை தர மறுத்து, அமைதிக் காப்பதாக நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்துவருகின்றது. இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் யாருக்கு எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டு யார் மூலம் விற்பனை செய்யப்படுகிறது என்று தெரியவந்தால், பலர் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் கடத்தலில் சிக்குவார்கள் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.