திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே தனியார் ஆம்னி பேருந்து இயக்கத்தை எதிர்த்து 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து சங்க ஊழியர்கள் தனியார் ஆம்னி பேருந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தனியார் ஆம்னி பேருந்தை எடுக்க முடியாதபடி அரசுப் பேருந்துகளை, ஆம்னி பேருந்தை சுற்றி நிறுத்திவிட்டு ஆம்னி பேருந்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் ஆம்னி பேருந்தை இடமறித்து அரசுப் பேருந்தை நிறுத்தி போராட்டத்தில் தொழிற்சங்க ஊழியர்கள் ஈடுபட்டதால் பேருந்து நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து திமுக தொழிற்சங்க தலைவர் சௌந்தர்ராஜன் கூறுகையில், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு பத்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. பவுர்ணமி காலங்களில் பத்து லட்சம் பக்தர்களுக்கு இரவு பகல் பாராமல் போக்குவரத்து ஊழியர்கள் சேவை செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்தை தனியாரிடம் ஒப்படைத்து போக்குவரத்துத் துறைக்கு நஷ்டத்தை ஏற்படுத்தவும், பயணிகளுக்கு அதிக கட்டணத்தை சுமையாக அளிக்கவும் இருப்பதை எதிர்த்து நாங்கள் அந்த தனியார் பேருந்தை தடுத்து நிறுத்தி ஆர்டிஓ அலுவலரிடம் ஒப்படைத்தோம் என்று கூறினார்.