திருவண்ணாமலை: கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இரண்டு ஆண்டுக்குப் பிறகு, தற்போது மீண்டும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாட அனைத்து நகர் மற்றும் கிராமப்புறங்களிலும் இளைஞர்கள் ஆர்வமுடன் காத்துக்கிடக்கின்றனர்.
அதற்காகவே திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, கண்ணமங்கலம், எஸ்.வி. நகரம், களம்பூர், சந்தவாசல் உள்ளிட்டப் பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறைந்தபட்சம் 3 அடி உயரத்தில் இருந்து 21 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் விதவிதமாகவும் தத்துவமாகவும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் சரி வர கிடைக்காததால் இந்த ஆண்டு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளின் விலைகள் அதிக விலைக்குப்போகலாம் என்பதால், பலர் இப்பொழுது அட்வான்ஸ் புக்கிங் செய்து வருகின்றனர்.
ஒரு சிலையின் விலை குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரம் முதல் அதிகப்பட்சம் ரூ.32 ஆயிரம் வரை விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு தற்பொழுது புக்கிங் ஆர்டர் செய்யப்பட்டு வருவதால், சிலைகளை வாங்க ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம இளைஞர்கள் ஆர்வமுடன் சென்று தங்களுக்குத் தேவையான சிலைகளைப் பார்த்து புக் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் அதிக விலைக்கு விற்பனையாவதால் ஆர்வமுடனும் மகிழ்ச்சியுடனும் சிலை தயாரிப்பாளர்கள் தயாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:புதுச்சேரி செங்கழுநீர் அம்மன் கோவில் தேராட்டம் கோலாகலம்