உலக நாடுகளின் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து, மனித குலத்தையே அலற வைத்துக்கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். இந்த நோய் தொற்று உலக நாடுகளுக்கு சவாலாகவும் இருந்து வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
இருப்பினும், தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் இளைஞர்கள், பொதுமக்கள் அலட்சியத்தோடு வெளியே சுற்றித் திரிகின்றனர். காவல்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் கண்காணித்து அவர்களை எச்சரித்தும் நூதன தண்டனை வழங்கியும் வருகின்றனர். அதேபோன்று திருவண்ணாமலையில், படித்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி அடுத்த கீழ்பாலூர் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாலூர் ஏரியில் ஒன்றுகூடி கிரிக்கெட் விளையாடி வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடலாடி காவல் நிலைய ஆய்வாளர், கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை எச்சரித்து அனுப்பினார். சமூக இடைவெளியின்றி, அலட்சியத்தோடு மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், படித்த இளைஞர்களே ஒன்றுகூடி கிரிக்கெட் விளையாடி சமூக இடைவெளியை கேலிக்குள்ளாக்கி வருவது சொந்த ஊர் மக்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'நண்பர் உடலுடன் 4 நாள் பயணம், கரோனா பாதிப்புக்கு நிதியுதவி'- இளைஞருக்கு முதலமைச்சர் பாராட்டு!