திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் கிராமத்தில் எம்.கே.ஜி என்ற திரையரங்கம் உள்ளது. நேற்றிரவு(ஏப்.15) இத்திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸின் ருத்ரன் திரைப்படத்தைப் பார்க்க திருவண்ணாமலையிலிருந்து 11 இளைஞர்கள் சென்றுள்ளனர். இவர்களில் ஒருவர் லுங்கி அணிந்து, படம் பார்க்க வந்துள்ளார். இதனால் திரையரங்கு ஊழியர்கள் அவருக்கு மட்டும் டிக்கெட் வழங்க மறுத்துள்ளனர். இதனால் திரையரங்கு ஊழியர்களிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக இளைஞர்கள் திரையரங்கு மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு திரையரங்க மேலாளரும், லுங்கி கட்டிக் கொண்டு திரையரங்கத்திற்குள் செல்ல அனுமதி இல்லை என நிர்வாகம் சார்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி லுங்கி அணிந்து வருபவர்களை படம் பார்க்க அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அப்போது, இந்த விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக எழுதித்தரும்படி இளைஞர்கள் கேட்டுள்ளனர். திரையரங்கு மேலாளரும் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தார். அதன் பிறகும் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மேலாளர் மங்கலம் காவல் நிலைய போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இளைஞர்களை திரையரங்கிலிருந்து வெளியேற்றினர். இதனால் இளைஞர்கள் 11 பேரும் திரைப்படம் பார்க்காமல் திரும்பிச் சென்றனர்.
அண்மையில் தேனியில் உள்ள திரையரங்கிற்கு லுங்கி கட்டிக்கொண்டு, குடும்பத்தோடு சென்ற நபருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மீண்டும் இப்படி ஒரு சம்பவம் திருவண்ணாமலையில் நடந்திருப்பது பலரிடையே அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நரிக்குறவர் மக்களுக்கு தடை - ரோகிணி தியேட்டர் ஊழியர்கள் மீது வழக்கு
இதையும் படிங்க: லுங்கி அணிந்து வந்தால் அனுமதி கிடையாது - தேனி திரையரங்க ஊழியர்கள் அட்டகாசம்!