திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த பாராசூர் கிராமத்தில் குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நாட்களாக தங்கள் கிராமத்திற்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறி நூறுக்கும் மேற்பட்ட பெண்களும் பொதுமக்களும் காலி குடங்களுடன் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்து பாராசூர் கிராமத்திற்கு விரைந்த அரசு அலுவலர்களிடம் பெண்களும் பொதுமக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பருவமழை காலங்களில் கிடைக்கும் மழை நீரைத் தேக்குவதற்காக அனைத்து ஏரிகளையும் குளங்களையும் தூர்வார வேண்டும். தமிழக அரசு குடிநீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அக்கிராம மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.