திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அடுத்த நார்த்தாம்பூண்டி கிராமத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் இருளர் இன மக்கள், இஸ்லாமியர்கள் என 41 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 50 வருடங்களாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தப் பகுதியில் தனிநபர் சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருவதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்து வந்தனர். விசாரணையின் முடிவில் நீதிபதிகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை இடிக்க உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டதால் அப்பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க:கிருஷ்ணகிரி பட்டாசு சேமிப்பு கிடங்கில் விபத்து - 5 பேர் உயிரிழப்பு
மேலும், வீடுகளில் வசித்து வருபவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தையும் தெருவில் எடுத்து வைத்தும், வீடுகளை இடிக்க வரும் ஜேசிபி இயந்திரத்தின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பெண்கள், தங்களது வீடுகளை இடிக்கக் கூடாது எனவும் தங்களுக்கு வசதிகளுடன் கூடிய உரிய மாற்று இடம் அளிக்க வேண்டும் எனவும், தாங்கள் இங்கிருந்து செல்வதற்கு கால அவகாசம் தேவை எனக் கூறி கோரிக்கை விடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், போராட்ட களத்தில் இரண்டு இஸ்லாமிய பெண்கள் ஜேசிபி இயந்திரத்தின் முன்பாக தொழுகையில் ஈடுபட்டதால், தற்போது அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த வீடுகளை அகற்றும் சம்பவத்தை அடுத்து இந்தப் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், மின் ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்த பின்னர், ஜேசிபி இயந்திரம் மூலம் வீடுகளை இடிக்கும் பணி தொடங்க உள்ளதால் இந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆக்கிரமிப்புகளில் கட்டப்பட்டு உள்ளதாக வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றை இடிக்க நீதிமன்றம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை உத்தரவிட்டு வருவதும், இதற்கு அங்கு வசிக்கக் கூடிய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் தொடர் கதையாக உள்ளது.
இதையும் படிங்க:அரசு போக்குவரத்து கழக ஊழியருக்கு 383 ஆண்டு சிறை - காரணம் என்ன?