கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள காந்திநகர், மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் சென்னை, வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்த 45 பேர் தங்க வைக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தூய்மைப் பணியாளர்களால் பள்ளி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இங்கு தங்கியுள்ளவர்களுக்கு சுகாதாரமான முறையில் தயாரான, சத்தான உணவுகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
![தற்காலிக முகாம்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-02-quarantine-checkup-vis-7203277_14052020135015_1405f_1589444415_877.png)
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கடந்த 30ஆம் தேதி முதல் நேற்று வரை, சென்னையிலிருந்து 2,878 பேர், மற்ற மாவட்டங்களிலிருந்து 915 பேர், வெளி மாநிலங்களில் இருந்து 1,246 பேர் என மொத்தம் 5,039 பேர், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு, ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமுத்தூர், செய்யார், வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களுக்கு வந்துள்ளனர்.
![தற்காலிக முகாம்களில் வழங்கப்படும் உணவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-02-quarantine-checkup-vis-7203277_14052020135015_1405f_1589444415_221.png)
இவர்கள் அனைவரும், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்களின் மூலம் கண்டறியப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள 21 தற்காலிக தங்கும் மையங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கட்டடங்களில் தங்கவைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவர்களது சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னைக்கு அனுப்பப்பட்டு, கரோனா உறுதியானவர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். நோய்த் தொற்று இல்லாதவர்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு 14 நாட்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இதையும் படிங்க: 'ரூ.11 ஆயிரம் கோடி விவசாய கடன் வழங்க ஒதுக்கீடு' - கூட்டுறவுத் துறை அமைச்சர்!