திருவண்ணாமலை: வந்தவாசி அடுத்த தெய்யாரில் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு வரலாறு ஆசிரியராக பொன்னையன், அறிவியல் ஆசிரியராக ராம்ராஜ் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்த இரண்டு ஆசிரியர்களும் கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து வந்த பத்தாம் வகுப்பு மாணவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது.
மேலும் நெற்றியில் பொட்டு வைக்க கூடாது, எனவும் மாணவர்களிடம் கடுமை காட்டியதாக கூறப்படுகிறது. இதனையறிந்த மாணவர்களின் பெற்றோர், கடந்த 3ஆம் தேதி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். ஆனால் ஆசிரியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், தலைமை ஆசிரியர் அலட்சியம் காட்டியதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று (ஜன.6) வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவர்களை, புகாருக்குள்ளான இரண்டு ஆசிரியர்களும் மீண்டும் அழைத்துள்ளனர். அப்போது மாணவர்கள் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலையை அறுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர், இரண்டு ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா தலைமையிலான காவலர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் சம்பந்தப்பட்ட இரண்டு ஆசிரியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: எம்.ஐ.டி. கல்லூரியில் 66 மாணவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு