திருவண்ணாமலை: பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவம்பர் 10ஆம் தேதி அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பரணி தீபம்
இந்நிலையில், கடந்த ஒன்பது நாள்களும், கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக திருக்கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் காலையிலும், இரவிலும் சாமி உலா வந்த நிலையில், விழாவின் 10ஆம் நாளான இன்று (நவம்பர் 19) அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில், ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தை விளக்கும்விதமாக கோயிலின் கருவறையிலிருந்து கொண்டுவரப்பட்ட தீபத்தினைக் கொண்டு ஐந்து மடக்குகளிலிருந்து பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதனையடுத்து, அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்ட இந்தப் பரணி தீபத்தினை சிவாச்சாரியர்கள் திருக்கோயிலினுள் ஊர்வலமாகக் கொண்டுசென்று கோயிலில் உள்ள அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகர் சன்னதி உள்ளிட்ட மற்ற சன்னதிகளுக்கு கொண்டுசென்று பரணி தீபத்தினை ஏற்றினார்.
தீபமலையின் மீது மகாதீபம்
கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக இந்த ஆண்டும் பக்தர்கள் இன்றி பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
தீபத் திருநாளான இன்று திருக்கோயிலுக்குள் ஆன்மிக பக்தர்கள் வந்து பரணி தீபத்தையும், மகா தீபத்தையும் காண மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நூற்றாண்டு கால வரலாற்றில் இரண்டாவது முறையாகக் குறைந்தளவு பக்தர்களை கொண்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள தீபமலை மீது மகாதீபம் ஏற்றப்படும்.
திருக்கோயில் அலங்காரம்
தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயில் முழுவதும் 14 ஆயிரம் தாமரை பூக்கள், ரோஜா பூக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு உண்ணாமலை, அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடி மரங்கள், பலிபீடங்கள் பல்வேறு தூண்கள் உள்ளிட்ட இடங்களில் மலர்களை கொண்டு சிறப்பாகத் தயார்செய்யப்பட்டிருந்தது.
பல்வேறு வகையான வண்ண பூக்களைக் கொண்டு சிவன் உருவம் தீப மலை உருவங்கள் யானை, மயில் உள்ளிட்ட உருவங்களை பிரத்யேகமாகத் தயார் செய்திருந்தனர். கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் பாதுகாப்புப் பணிக்காக ஆயிரக்கணக்கான காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். பக்தர்களை அனுமதிக்கப்படாததால் கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிங்க:கரையைக் கடந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்