திருவண்ணாமலையில் நாளை தீபத்திருவிழா பஞ்ச ரதங்கள் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, மாட வீதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கோயில் ராஜகோபுரம் எதிரிலிருந்து புறப்படும் பஞ்ச ரதங்களும் தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெருக்கள் வழியாக வலம்வந்து மீண்டும் நிலைக்கு வரும்.
எனவே, தேர்கள் வீதியுலா வரும் மாட வீதிகளில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், பாதுகாப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ். கந்தசாமி, காவல் கண்காணிப்பாளா் எம்.ஆா். சிபி சக்கரவா்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கோயில் தரிசன டிக்கெட் வழங்குவதில் மோசடி - ஊழியர்கள் சஸ்பெண்ட்!
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, “இன்றுமுதல் தீபத்திருவிழா முடியும்வரை கழிவறைக்கு கட்டணம் இல்லை, மாட்டுச் சந்தைக்கு கட்டணம் இல்லை, கடை வைப்பதற்கும் இலவசம், வாகனம் நிறுத்துவதற்கும் இலவசம். இதனை மீறி கட்டாய வசூலில் ஈடுபடுபவர்கள் மீது 7695800650 என்ற தொலைபேசி, வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.
புகார் வரும் பட்சத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் காவல் துறையிடம் தெரிவித்து, அதன்பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தாண்டு மலை ஏறுவதற்கு 2500 பேருக்கு அனுமதி அளிக்கப்படும். அவர்களுக்கான டோக்கன் சண்முகா பள்ளியிலிருந்து வழங்கப்படும். பக்தர்களின் கோரிக்கையை ஏற்றுச்சென்ற ஆண்டு அரசு கலைக்கல்லூரியில் தந்த டோக்கன்கள் தற்போது சண்முகா பள்ளியில் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.