திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகேயள்ள சின்னையன் பேட்டையைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவர் கடந்த 14ஆம் தேதி கேரளாவிலிருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவரை கரோனா பரிசோதனைக்காக கிராம நிர்வாக அலுவலர் சிறப்பு முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்குக் கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. அப்போது, அங்கிருந்த அலுவலர்களின் பொறுப்பற்ற பேச்சால் அவர் அங்கிருந்த மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது.
இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே கிராம நிர்வாக அலுவலர், அர்ஜுனனின் மனைவியிடம், அவரது கணவர் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்துவிட்டதாகவும், அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை விரைந்த அர்ஜுனனின் மனைவி, அவரது உறவினர்கள் ஆகியோர் அர்ஜுனனை மேல் சிகிச்சைக்காக தானிப்பாடி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இவருடைய உடலை அடக்கம் செய்து நான்கு நாள்களுக்குப் பிறகுதான் அர்ஜுனனின் மனைவிக்கு, தனது கணவர் அலுவலர்களின் பொறுப்பற்ற பேச்சால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அவர் தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, சிறப்பு முகாமில் அலுவலர்களின் பொறுப்பற்ற பேச்சால் தனது கணவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிறப்பு முகாமில் பாதுகாப்பிலிருந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய அவர், தனது கணவர் இறந்ததற்கான உண்மையான காரணத்தைத் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா மருத்துவ சேவை - செவிலிய சகோதரிகளை மலர்த்தூவி வரவேற்ற பொதுமக்கள்!