திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் 30ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் தன்னுடைய வாக்கினை செலுத்த முடியாத நிலையில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான வேட்பாளர் உள்ளார். சமீபத்தில் வெளியிட்ட துணை வாக்காளர் பட்டியலில் அவர் இறந்ததாகப் பெயர் நீக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கலசப்பாக்கம் ஒன்றியம், எர்ணாமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அந்த ஊராட்சிக்குள்பட்ட பானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது மனைவி பாஞ்சாலை (65்) போட்டியிடுகிறார். இவருக்குப் பூட்டு சின்னம் ஒதுக்கப்பட்டு பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
இறந்ததாகப் பெயர் நீக்கம்
இந்நிலையில் 23ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட துணை வாக்காளர் பட்டியலில் இவரது பெயர் இல்லை. இறந்துவிட்டதாக நீக்கப்பட்டுள்ளது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.
வாக்குப்பதிவில் தடை ஏற்படாது
மேலும், தற்போது வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அவரால் வாக்கு செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் அலுவலர்களிடம் கேட்டபோது, "இதனால் வாக்குப்பதிவில் தடை ஏற்படாது. வாக்குப்பதிவு நடைபெறும். ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் சம்பந்தப்பட்ட வேட்பாளர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளனர்.
வேட்பாளர் பெயரே வாக்காளர் பட்டியலில் இறந்ததாக நீக்கியிருப்பது அந்த ஊர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால் குழப்பமே ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையன்று தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கும் என்பது குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.